மூணாறு பிப்16,
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த பழையனூர் போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஒரு சிறுவன் பேசினான். அவன் தன்னுடைய கால்பந்து ஒன்று திருடு போய்விட்டது. அதனை கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம் புகார் கூறினான். அவன் பெயர், ஊர் விவரத்தை போலீசார் கேட்டனர். திருச்சூரை சேர்ந்த அதுல் (வயது 10) என்றும், தன்னுடைய தந்தை சுதீஷ், திருச்சூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார் என்றும் கூறினான்.மேலும் பந்து திருட்டு போனது குறித்து என்னுடைய பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் புதிய பந்து வாங்கி தருவதாகவும், திருட்டு போன பந்தை தேட முடியாது என்றும் கூறிவிட்டனர்.ஆனால் எனக்கு திருட்டு போன பந்து தான் வேண்டும் என்று போன் மூலம் போலீசில் புகார் அளித்தேன் என்றான். இதனை அறிந்த பழையனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் போலீசார் சிறுவனின் காணாமல் போன பந்தை தேடினர். அதே ஊரை சேர்ந்த கால்பந்து விளையாடும் சில இளைஞர்கள் அந்த பந்தை எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களிடம் இருந்த சிறுவனின் பந்தை போலீசார் மீட்டனர்.பின்னர் பழையனூர் போலீஸ் நிலையத்திற்கு சிறுவனை வரவழைத்தனர். சிறுவனிடம் பந்தை உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். மேலும் திருட்டு போன பந்து தான் வேண்டும் என்று மன உறுதியோடு இருந்த சிறுவனை போலீசார் பாராட்டினர். அதனை பார்த்து சிறுவன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். போலீஸ் நிலையத்தில் எப்போதும் பரபரப்பாகவும், பல்வேறு வழக்குகளில் தீர்வு காண்பதில் தீவிரமாகவும் போலீசார் இருப்பார்கள். இதற்கிடையே சிறுவனின் புகாரை அலட்சியம் செய்யாமல் பந்தை கண்டுபிடித்து கொடுத்த போலீசாரை, பொதுமக்கள் பாராட்டினர்.
திருச்சூரில் ருசிகரம்:‘பந்து’ திருட்டு போனதாக போலீசில் சிறுவன் புகார்