பயனின்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

கடத்தூர் பிப்14,
கடத்தூர் புது பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம், வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தர்மபுரி மாவட்டம், கடத்தூர் புது பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும், சேலம், தர்மபுரி, அரூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும், 60க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, பஸ் ஸ்டாண்டிற்கு வருகின்றனர். அவ்வாறு வரும் மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த, 2018ல், தர்மபுரி லோக்சபா உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டது. இதில் கடந்த, எட்டு மாதங்களுக்கு மேலாக, தண்ணீர் வருவதில்லை. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் வழங்கும் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், அருகில் உள்ள கடைகளில், தண்ணீர் வியாபாரம் பாதிக்கும் என்பதால், இது குறித்து, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என, குற்றம்சாட்டும் மக்கள், குடிநீர் வழங்கும் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.